கட்டுரை வகைகள் மற்றும் கட்டுரை எழுதும் முறை

கட்டுரைத்தல் என்பது உறுதியாகச் சொல்லுதல், தெளிவாகக் கூறுதல் என்று பொருள்படும். எண்ணங்களை ஒரு கட்டுக்கோப்புடன் முறைப்பட ஒழுங்குபடுத்தி அமைத்தல் கட்டுரையாகும். எழுதுபவர் தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் ஒழுங்குற எழுதுவது கட்டுரை எனப்படும்.

எழுதுபவர் தமது அனுபவங்கள், எண்ணங்கள், செய்திகள், கற்பனைகள், நகைச்சுவை, அறிவியல், அரசியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாகப் பல்வேறு விதமாகக் கட்டுரைகளை எழுதுவர். ஆங்கிலத்தில் கட்டுரை (Essay) என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லாக முயற்சி (Attempt) என்று பொருள் கொள்ளப்படும். ஒருவர் தமது எண்ணங்களைச் சொல்லுவதற்குச் செய்யப்படும் முயற்சியே கட்டுரை எனப் பொருள் கொள்ளப்படும் என்பர் அறிஞர்.

பாடசாலையில் மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் பலவகைப்படும். பல நூல்களைப் படிப்பதால் ஏற்படும் அறிவு, ஆழம் என்பனவும், பிற அறிஞர்களுடன் உரையாடுவதால் பெற்றுக் கொள்ளும் அறிவும் அவர்களது மனதிற் பதிந்து உரிய சந்தர்ப்பங்களில் அவற்றை நினைவு கூர்ந்து பிரயோகிக்கும் திறன் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தப்
படுகின்றது. மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் மிக நீண்டதாக அமைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள் எழுதும் கட்டுரைகள் எழுதுவதற்கான பயிற்சி என்றே கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒரு தலைப்பில் மாணவர்கள் தங்களுடைய எண்ணங்களை ஒழுங்காகவும், கட்டுக் கோப்புடனும் வெளிப்படுத்த . முயற்சிப்பதே அவர்கள் கட்டுரை எழுதுவதற்கான நோக்கமாகக் கொள்ளப்படும்.

மாணவர்கள் எழுதும் கட்டுரைகளில் பின்வரும் அம்சங்கள் முக்கிய
இடம்பெற வேண்டுமெனக் கருதப்படும். அவையாவன:

 1. ஒருமைப்பாடு
 2. ஒழுங்கு
 3. சுருங்கக் கூறி விளங்க வைத்தல்
 4. சீரான மொழி நடை
 5. தனித்தன்மை

i) ஒருமைப்பாடு

எக்கட்டுரையானாலும் அதில் ஒருமைப்பாடு இருத்தல் அவசியமாகும். அதாவது சொல்ல வந்த விடயத்தைக் குறிப்பிட்ட நோக்குடன் கூறுவதாக அது அமைய வேண்டும். எடுத்துக் கொண்ட விடயத்தைப் பற்றி எழுதுபவர் மனதில் முதலில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விடய வரம்பைத் தாண்டி வெளியில் செல்லக் கூடாது. அதாவது தாம் சொல்ல வந்த விடயத்திற்குச் சம்பந்தமில்லாத வேறு தகவல்களைக் கொடுத்தல் கூடாது. அதேவேளை சொல்ல வந்த
விடயத்திற்குப் பொருத்தமான தகவல்களைப் பல்வேறு கோணங்களில் இருந்து எடுத்துரைத்தல் தவறாகாது.

ii) ஒழுங்கு

எழுதுபவர் தமது எண்ணங்களை வெளியிடுவதில் ஒழுங்கு பின்பற்றப்படவேண்டும். தமது கருத்துக்களைக் குறிப்பிட்ட ஒரு முடிவை நோக்கி அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். மனதில் தோன்றுபவை அனைத்தையும் எழுதிவிடலாகாது. விடயத்தில் ஒருமைப்பாடு இருப்பதோடு விடயத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில்
விளக்கமளிப்பதிலும் ஒருமைப்பாடு இருத்தல் அவசியமாகும். எனவே கட்டுரையினை எழுதுமுன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி நன்கு சிந்தித்துச் சட்டகம் ஒன்றை வகுத்துக் கொண்டு எழுத முற்பட வேண்டும்.

iii) சுருங்கக் கூறி விளங்க வைத்தல்

பாடசாலை மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் வகுப்புகளுக்கு ஏற்ப விரிவடைந்து செல்லும். மிக நீளமான கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதில்லை. முந்நூறு சொற்கள் முதல் ஐந்நூறு சொற்கள் வரை அவை அமையலாம். கூடுமானவரை சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முறையில் அவை அமைதல் வேண்டும். எடுத்த விடயத்தைச்
சுருக்கமாகவும், விளக்கமாகவும் எழுதுதலே சிறப்புடையதாகும்.

iv) சீரான மொழி நடை

கட்டுரையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பண்புடையனவாக அமைதல் வேண்டும். சீரான மொழிநடையில் இலக்கிய அழகுடன் எழுதப்படும் கட்டுரைகள் சிறந்தனவாகும். பேச்சு வழக்குச் சொற்களை (கொச்சையான வார்த்தைகளை) அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வாக்கியங்கள் எளிமையாகவும், இயற்கையானதாயும் இருத்தல் வேண்டும். எண்ணங்கள் தெளிவாக இருப்பின் மொழிநடையும் சிறப்பாக அமையும். கட்டுரையின்
மொழிநடையே எழுதுபவரின் ஆற்றலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
என்பதை மறத்தல் கூடாது.

v) தனித்தன்மை

கட்டுரை எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தனித்தன்மை உண்டு. கட்டுரையை வாசிக்கும் போது அத்தனித்தன்மை நன்கு பிரகாசிக்கும். எழுதுகின்றவர் தன்னுடைய எண்ணக் கருத்துக்களை வெளியிடும்போது இந்தத் தனித்தன்மை தானாகவே வெளிப்படும். மேற்கூறிய ஐந்து அம்சங்களும் நல்ல முறையில் இடம்பெறும்போது கட்டுரை சிறப்பானதாக அமையும். பொருத்தமான தலைப்பு, சொல்லும் முறையில் ஒழுங்கு, விடயத்தெளிவு, மொழிநடை ஆகியன அனைத்தும்
அடங்கியதாகக் கட்டுரை ஒன்று அமைந்திருப்பின் அதனை முழுமையுற்ற
கட்டுரை வடிவமாக ஏற்றுக் கொள்வர்.

கட்டுரை வகைகள்:

மாணவர் எழுதத்தக்க கட்டுரைகளைப் பொதுவாக ஐந்து வகையாக
வகைப்படுத்துவர். அவையாவன:

 1. வரலாறுகளை (சம்பவங்களை)க் கூறும் கட்டுரைகள்
 2. வருணனைக் கட்டுரைகள்
 3. சிந்தனைக் கட்டுரைகள்
 4. விளக்கக் கட்டுரைகள்
 5. கற்பனைக் கட்டுரைகள்

உயர்தர வகுப்புக்களில் இவை மேலும் விரிவடையும். அவற்றைப் பின்வரும் வகைகளில் அடக்கலாம்.

1) தற்சார்புக் கட்டுரைகள்
சுய விருப்பு, வெறுப்பு, அனுபவங்கள், வகையில் இவை அமையும். உதாரணம்: எனக்குச் சிறகிருந்தால், மாணவர்களின் அபிப்பிராயங்கள், நினைவுகள் போன்றவற்றைச் சுவைபட விளக்கும் நான் ஓர் எழுத்தாளனானால்

உதாரணம்:

நான் மருத்துவரானால்….!
‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமந்திரம் தந்த திருமூலர். உடல் வளர உள்ளமும் வளரும். இந்த உண்மையை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனம் ஓர் ஆரோக்கியமான உடலிற்றான் இருக்கும் என்பர். ‘உடலினை உறுதிசெய் என்றார் பாரதியார். இவையெல்லாம் உடலை நன்கு பேணுவதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டே யானும் உடல்நலம் பேணும் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்து உயர் கல்வி பெற்று மருத்துவராக வர விரும்புகின்றேன். நான் மருத்துவரானால் என் பணி எத்தகையதாயிருக்கும் என்பதை எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

இன்று அறிவியல் பெரிதும் முன்னேறியுள்ளது. தினந்தினம் மருத்துவத்துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்பத் தரமான சிகிச்சை அளிக்க நான் முற்படுவேன். ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்றார் வள்ளுவர். இது பொதுவாக மருத்துவமுறை எனினும் எனது அறிவைப் பயன்படுத்திச் சிறப்புச் சிகிச்சைக்கு ஆவன செய்வேன். என்னை நாடி வரும் நோயாளர் நலம் பெற எனது திறமை முழுவதையும் யான் பயன்படுத்திச் சிகிச்சை வழங்குவேன். மருத்துவத்துறை ஏனைய துறைகளைப் போன்றதல்ல.

இது உயிர்காக்கும் தொழில் சார்ந்தது. இன்று இது பயன் கருதிச் செய்யும் வியாபாரம் போன்று மாறி வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் சொல்லொணாக்
கஷ்டமுறுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். பயன் கருதாத் தொண்டாக, இறைவனுக்குச் செய்யும் பணியாக இதனைக் கருத வேண்டும். நான் மருத்துவரானால் வருமானம் பெருக்கிக்கொள்ளும் ஒரு தொழிலாக இதனைக்கருதாது இறைவனுக்குச் செய்யும் ஒரு பணியாக இதனைக் கருதிச்செயற்படுவேன்.’ என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கைக் கடைப்பிடித் தொழுகுவேன். ஏழை எளிய மக்களுக்கு இலவசசிகிச்சை அளிப்பேன். வசதி படைத்தோரிடம் ஒரு குறிப்பிட்டளவு கட்டணமே அறவிடுவேன்.

சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் பலர் சுகாதார நெறிமுறைகளை அறியாதவர்களாக அல்லற்படுகின்றனர். அத்தகையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரக்கருத்தரங்குகள் நடத்த முற்படுவேன். பல்வேறு சமுக நிறுவனங்களோடும்தொடர்பு கொண்டு நடமாடும் இலவச சிகிச்சை முகாம்களை நடத்த ஏற்பாடு செய்வேன். சமுதாயப்பணியாகக் கருதி இதனைச் செயற்படுத்த முற்படுவேன். மகளிருக்கும் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் தேவைப்படும் சிகிச்சை வசதிகளை மட்டுமன்றி ஊட்டச்சத்து மாத்திரைகள், மருந்துவகைகள் போன்றவற்றைப் பெற்றுத் தரவும் முற்படுவேன், நாளைய பிரசைகளாக நாட்டின்தலைவர்களாக உருவாகப் போகும் இன்றைய சிறார்கள் உடல் நலமும் உள நலமும் கொண்டவர்களாக விளங்குதற்கு என்னாலான உதவிகளையும் வழங்குவேன்.

‘உடம்பாரழியில் உயிரார் அழிவர்’ என்பது திருமூலர் தம் வாக்கு.எனவே உடல் நலமே எல்லாவற்றிலும் மிகச் சிறந்த செல்வமாகும். மக்கள் நோயற்றவர்களாக, உடல் நலமும் உளநலமும் வாய்க்கப் பெற்றவர்களாக வாழ்ந்திட, வளர்ந்திட உழைப்பது நம் அனைவரதும்கடமையாகும். இக்கடமையைச் செவ்வனே செய்திட, சமுதாயத்தில் விழிப்புணர்வு உருப்பெற யான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னைப் போல ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளோரும் அவரவர் துறை சார்ந்த தொழில்களில் சேவை மனப்பான்மையுடன் செயற்படுவார்களாயின் வீடும் நாடும் நலம் பெறும் என்பது திண்ணம். நாடு நலம் பெற்றாலே வீடும் நலம் பெறும் என்பதை நாமுணர்தல் வேண்டும். ‘நாட்டுக்குழைப்போம்! நல்லன செய்வோம்!!’ என்ற குறிக்கோளுடன் யான் மருத்துவத்துறையில் மகத்தான பணிகளை ஆற்றிட உறுதி பூண்டுள்ளேன் என்பதை உங்களுக்குக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

2) வரலாற்றுக் கட்டுரைகள்
ஒன்றின் வரலாற்றை ஒழுங்குறக் கூறும் வகையில் எழுதப்படுவன.(பெரியார் வரலாறு, சுயசரிதை போன்றன)

உதாரணம்:

ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

இன்று மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கிய வகையாகச் சிறுகதை விளங்குகிறது. இத்துறை காலந்தோறும் பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழல்களினால் பாதிக்கப்பட்டுச் செம்மையும் பொலிவும் பெற்று வளர்ந்துள்ளது. ஈழத்தில் சிறுகதை இலக்கியம் இன்று தனிச் சிறப்புப் பெற்று மிளிர்கின்றது. சிறுகதைத் தொகுதிகள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணமுள்ளன.
வார இதழ்களும், சிற்றிதழ்களும் சிறுகதைகளை விருப்பிப் பிரசுரிக்கின்றன. இந்நிலையில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியினைச் சிறிது நோக்குவோம். 1930ஆம் ஆண்டளவில் ஈழத்திலும் சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கான சூழ்நிலை உருவாயிற்று. மேலை நாட்டு இலக்கியங்களின் தொடர்பு, தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களின் தாக்கம் இத்தகைய சூழ்நிலையினை உருவாக்கியது. ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன்னோடிகள் மூலவர்களெனப் போற்றப்படும் சி.வைத்திலிங்கம். இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரின் கதைகள்,‘கலைமகள்’, ‘கிராம ஊழியன்’ பத்திரிகைகளில் வெளியாயின.

இவர்களது கதைகளில் தமிழ்நாட்டு எழுத்தாளர்களான கு.ப.ரா. பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன், மௌனி ஆகியோரின் நேரடித்தாக்கமும், மேலைநாட்டுச் சிறுகதைகளின் பாதிப்பும் காணப்பட்டது.எனினும் ஈழத்து மண்வாசனையும், கிராமிய மக்களின் வாழ்க்கைச்சித்திரிப்பும் பெருமளவு பிரதிபலித்தது.

1940 – 1950 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஈழத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் பலர் உருவாகினர். இலக்கியம் சமூகத்தைச் சீர்திருத்தவும்,புதியதோர் சமூகத்தை உருவாக்கவும் பயன்பட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் இவர்கள் தமது படைப்புக்களை வெளியிட்டனர். பிரதேச மண்வாசனையுடன் கூடிய சிறுகதைகள் பல உருவாகின. இக்காலகட்டத்தில் ஈழகேசரியின் பங்களிப்பும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. அ. செ. முருகானந்தன், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம், வரதர் (தி.ச. வரதராசன்), கனக செந்திநாதன், சொக்கன், சு. வேலுப்பிள்ளை (சு.வே) க. சிவகுருநாதன், சு. நல்லையா, தாழையடி சபாரத்தினம், சு.இராஜநாயகம் போன்றோர் இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்களாவர். தமிழகத்தில் ‘மணிக்கொடி’ க்காலம் போன்று ஈழத்தில் இக்காலத்தை ‘மறுமலர்ச்சி’ க் காலம் எனவும் கூறுவர். 1945ஆம் ஆண்டில் ஆரம்பமான ‘மறுமலர்ச்சி’ புதிய பல எழுத்தாளர்களை மட்டுமன்றிப் புதிய பல கருத்துக்களையும் அறிமுகப்படுத்தியது.

‘இவர்களது சிறுகதைகளில் யாழ்ப்பாணம் வெறும் களமாக மாத்திரம் அமையவில்லை. யாழ்ப்பாணத்து வாழ்க்கைப் பிரச்சினைகளே இவர்களது சிறுகதைகளுக்குப் பொருளாயின்’ எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளமை இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது. ஈழத்தில் 1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தமிழ் இலக்கியத்துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கியது. 1956 – 1960 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டம் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது. இக்காலகட்டத்தில் ‘வீரகேசரி’, ‘தினகரன்’, ‘சுதந்திரன்’, ‘தேசாபிமானி’ போன்ற பத்திரிகைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன.’சுதந்திரன்’ புதிய எழுத்தாளர் பலரை அறிமுகப் படுத்தியது. சிறுகதையின் உருவ, உள்ளடக்க அடிப்படையில் விரிவான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக, பொருளாதார அடிப்படையிலான முரண்பாடுகளின் விளைவுகளைச் சித்திரிக்கும் வகையில் சிறுகதைகள் பல வெளியாயின. இக்காலப்பகுதியின் சிறுகதைகள் உருவம், உள்ளடக்கம் ஆகிய வற்றில்
ஒப்பீட்டளவில் முன்னைய பரம்பரையிலிருந்து வேறுபட்டிருந்தன.

பல வெளியாகின. மு. தளையசிங்கம், செ. கதிர்காமநாதன், செ.யோகநாதன், நந்தி, யோ. பெனடிக்பாலன், செம்பியன் செல்வன், செங்கையாழியான், கே.வி. நடராசன், தெணியான், க. நெல்லை க. பேரன், குந்தவை, பவானி, தெளிவத்தை ஜோசப், சிற்பி, மாத்தளை வடிவேலன், மலரன்பன், பூரணி, மலைச்செல்வன், சாரல்நாடன்,மாத்தளை சோமு, திருச்செந்தூரன், நூரளை சண்முகநாதன், உதயணன் போன்றோர் சிறந்த பல சிறுகதைகளைப் படைத்தனர். மலையகத்தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கையினைச் சித்திரிக்கும் சிறுகதைகள் பலவற்றை மலையக எழுத்தாளர்கள் எழுதினர். 1970 காலப் பகுதிகளில் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் திக்குவெல்லை கமால், லெ. முருகபூபதி, பொ. பத்மநாதன், எஸ்.எம். இக்பால், காவலூர் ஜெகநாதன், ப. ஆப்டீன், அ. பாலமனோகரன், அ.ஸ. அப்துல்ஸமது, சுதாராஜ், அன்ரனி ஜீவா, மு. கனகராசன், குப்பிளான் ஐ. சண்முகன், துரை சுப்பிரமணியன், மு. பொன்னம்பலம், ரஞ்சகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

எழுபதுகளின் பின் இன்றுவரை பல்வேறு சிறுகதை எழுத்தாளர்கள் ஈழத்தில் உருவாகியுள்ளனர். இவர்களின் படைப்புக்களின் கருப்பொருள்கள் மிக விரிவும், கூர்மையும் அடைந்துள்ளன. கிராமிய வாழ்க்கை நகர்ப்புற வாழ்க்கை இரண்டுக்குமிடையிலான முரண்பாடுகள், மனித வாழ்வின் அவலங்கள், மற்றும் கண்ணில்படுகின்ற மனத்தில் தைக்கின்ற அனைத்தும் சிறுகதைகளில் பிரதிபலிக்கின்றன. விமர்சிக்கப்படுகின்றன. தேசிய இனப்பிரச்சினை முனைப்புக்கொண்ட காலமிதுவாகும்.

எண்பதுகளின் பின் படைக்கப்படும் சிறுகதைகளில் இன தொடர்பான நிகழ்வுகளும் முக்கிய இடம்பெற்று வருவதைக் முடிகின்றது. இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை பெண்ணிலைவாதச் சிந்தனைகள், விடுதலை வேட்கை போன்றவற்றை மையமாகக் கொண்ட அநேகம் சிறுகதைகள் இக்காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. முன்னர் எக்காலத்தையும் விட 1980 இன் பின் சிறுகதைத் தொகுதிகள் பல வெளிவந்து ள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் உருவான எழுத்தாளர்களில் திருமதி கோகிலா மகேந்திரன், இணுவை சிதம்பர திருச்செந்திநாதன், சோ. ராமேஸ்வரன், சட்டநாதன், மு. சிவலிங்கம், தாமரைச்செல்வி, கே. ஆர். டேவிட், உமா வரதராசன், சாந்தன், ராஜஸ்ரீகாந்தன், அ. யேசுராசா, என். கே. மகாலிங்கம், மு. புஸ்பராசன், நந்தினி சேவியர், அ. ரவி, க. தணிகாசலம், நா. தர்மலிங்கம், ச.முருகானந்தன் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். இன்று இவர்களில் சிலர் புகழ்மிக்க பல படைப்புக்களைத் தந்துள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகள், புலம் பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை, அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை நன்கு சித்திரிக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பல்வேறு சிறுகதைத்தொகுப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. ‘மறுமலர்ச்சி’ சிறுகதைகளின் தொகுப்பு, ‘ஈழகேசரி’ சிறுகதைகளின் தொகுப்பு என்பன குறிப்பிடத்தக்கன.சுருங்கக்கூறின் தமிழ் நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களை விட ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களில் சமுதாயப் பார்வை கூர்மை பெற்று விளங்குகின்றது எனலாம். இத்தகைய ஆரோக்கியமான சூழ்நிலையில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி பெருமைப்படத்தக்க வகையில் அமைந்துள்ளது.

3) வருணனைக் கட்டுரைகள்
ஒரு விடயம் தொடர்பாக வருணித்துக் கூறுவது வருணனைக்கட்டுரையாகும். (கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது, நான் கண்ட வெள்ளப்பெருக்கு, நான் பார்த்த திரைப்படம் போன்றவை)

உதாரணம்:

கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது
‘இந்து சமுத்திரத்தின் நித்திலம்’ எனப் போற்றப்படும் ஈழநாட்டின் இதயம் போன்று மிளர்வது கொழும்பு மாநகரம். உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும். கொழும்பு மாநகரின் மேற்குப் புறத்தே அமைந்துள்ளது காலிமுகத்திடல். அதன் கரையில் உலா வருவதில் எனக்குத்தீராத ஆசை. நீண்ட நாட்களுக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காலிமுகத்திடலுக்குச் சென்றிருந்தேன். பழைய பாராளுமன்றக் கட்டடத்தின் எதிர்ப்புறத்தே கடற்கரையோரமாக அமைந்திருந்த படிக்கட்டொன்றில் அமர்ந்தேன். வானம் மப்பும் மந்தாரமுமற்றுத் தெளிவாக இருந்தது.
தென்றல் காற்று என் மேனிதழுவி இன்பமூட்டியது. எதிரே இந்துமாக்கடல் இரைந்து கொண்டிருந்தது. அக்கருநீலக் கடல் என்னை வா வா என்று அழைப்பது போல அலை எழுப்பி அரவணைத்து அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தது.

எல்லையற்று விரிந்து பரந்த அக்கடலைப் பார்த்தபோது என்னுள்ளமும் விரிவடைந்தது. கடலோரமாகச் சென்று நின்று கொண்டேன். கடலையும் வானையும் ஒரு சேர நோக்கினேன். ஆகா! என்ன அழகு. அவை ஒன்றோடொன்று கட்டித் தழுவி விளையாடுவதுபோன்றிருந்தது. வரிசை வரிசைகளாக வரும் அலைகள் மேலெழுந்தும் உருண்டும் புரண்டும் வெண்மையான நுரைகளைக் கக்கியவண்ணம் கரையை வந்து முத்தமிட்டுச் சென்றன. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் எழுந்து வரும் காட்சி வெண்மை நிறம் கொண்ட மலைகள் அசைந்து வருவன போலவே தோன்றின. கடலன்னையின் பட்டாடையில் பதித்த வெண்சரிகைக் கொடிகள் போல அவற்றின் நுரைகள் என் கண்களுக்குத் தோன்றின. வரிசை வரிசையாக மேலெழுந்தும் தாழ்ந்தும் வரும் அலைத்திரள்கள் குதிரைப்படையொன்று அணிவகுத்து வருவது போலவும் தோன்றின.

இந்த அரிய காட்சியில் என்னை மறந்து லயித்திருந்த என்னைக்கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் ஆரவாரம் திரும்பிப் பார்க்கச் செய்தது. சின்னஞ்சிறியவர்கள் வெகு ஆனந்தமாகக் கடற்கரை மணற்பரப்பில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கடல் சென்று விடும் எட்டப்போகாதீர்கள் என்று அவர்களது பெற்றோர்கள் எச்சரித்த வண்ணமிருந்தனர். வேறு சிலர் தங்களை மறந்த நிலையில் கடலோரத்தில் கதைகள் பேசிக் களித்துக் கொண்டிருந்தனர். சிட்டுக்குருவிகள் அன்ன சின்னஞ் சிறுமிகள் வட்டமாக அமர்ந்து கடல் மணலில் சிற்றில் அமைத்து சமையல் செய்வதாகப் பாவனை செய்து கொண்டிருந்தனர்.

வேகமாக வந்த கடல் அலைகள் சில அவர்களது சிற்றில்களை அடித்துச் சென்றன. கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் ஆரவாரம் திரும்பிப் பார்க்கச் செய்தது. சின்னஞ்சிறியவர்கள் வெகு ஆனந்தமாக க்கடற்கரை மணற்பரப்பில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கடல் சென்று விடும் எட்டப்போகாதீர்கள் என்று அவர்களது பெற்றோர்கள் எச்சரித்த வண்ணமிருந்தனர். வேறு சிலர் தங்களை மறந்த நிலையில் கடலோரத்தில் கதைகள் பேசிக் களித்துக் கொண்டிருந்தனர். சிட்டுக்குருவிகள் அன்ன சின்னஞ் சிறுமிகள் வட்டமாக அமர்ந்து கடல் மணலில் சிற்றில் அமைத்து சமையல் செய்வதாகப் பாவனை செய்து கொண்டிருந்தனர். வேகமாக வந்த கடல் அலைகள் சில அவர்களது சிற்றில்களை அடித்துச் சென்றன.

சிறுகால் நண்டுகள் சில தங்கள் வளைகளை விட்டு வெளியேறி மணற்பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் எட்டுக் கால்களும் மணற்பரப்பில் பதிந்தன. அவை மணற்பரப்பில் பதித்த பூக்களைப் போல அழகொளிரக் காட்சி தந்தன. அவற்றையும் அலைக்கரங்கள் விட்டு வைக்கவில்லை. அள்ளிச் சென்றன. அவ்வேளையில் நம்நாட்டுக் கவிஞர் மஹாகவியின் அருமையான பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது.

‘சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும் சில்வேளை இதை வந்து கடல் கொண்டு போகும்’ என்ற கவிஞரின் தத்ரூபமான சித்திரக் காட்சியினை நேரிற் கண்டு மகிழ்ந்தேன்.

கடலின் தொலைவில் பாரிய கப்பல்கள் புகை கக்கியபடி வேகமாகச் செல்வதைக் கண்டேன். அவை கொழும்புத்துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அவை மட்டுமன்றிச் சிறு சிறு புள்ளிகள் போலப் படகுகள் சில தெரிந்தன. அவை நான் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கிவந்து கொண்டிருந்தன. அவை மீனவர்களது படகுகள் என்பதைக் கிட்ட வந்தபோது தெரிந்து கொண்டேன். பகலில் மீன்படிப்பதற்காக ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது சிறிய படகுகள் பாய் விரித்து கடல் அலைகளில் மிதந்து கொண்டிருந்தகாட்சியானது கடல் அன்னைக்கு வெண்சாமரம் வீசுவது போன்றிருந்தது.கடலின் அடிப்பரப்பில் அநந்த கோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவை கடல் தரும் செல்வங்கள். அவற்றிற்கிடையேயும் போராட்டங்கள் நிகழத்தான் செய்கின்றன போலும். பெரியவை சிறியவைகளைத் தாக்கச் சிறியவை
மேலெழுந்து மின்னல் போல் பாய்ந்து செல்கின்றன.

அவை மாலை வெயிலில் மின்னற் கீற்றுப் போலவும் தங்கக் கட்டிகள் போலவும் காட்சி தருகின்றன. இப்பொழுது சூரியன் மெல்ல மெல்ல தன் பொற்கிரணங்களை ஒடுக்குகிறான். செக்கச் சிவந்த அவன் தோற்றம் தங்கத் தாம்பாளம் போலவும் செம்பொற் குடம் போலவும் காட்சி தருகிறது. செந்நெருப்பினைத்தகடு செய்து உருக்கி வார்த்தாற் போலப் பரிதியின் தோற்றம் என் கண்ணுக்குத் தெரிகிறது. நேரம் செல்லச் செல்லப் பருதிக் கோளத்தைச் சூழ்ந்திருந்த முகில்கள் தீப்பற்றி எரிவதைப் போலத் தெரிகின்றன.நீலவானில் மிதக்கும் தங்கக்குடம் போலப் பருதிக் கோளம் காட்சி தருகிறது. அதேவேளை வானமங்கையானவள் மஞ்சள் குளித்து முகம் மினுக்கித்தன் காதலனை வரவேற்க வரும் அழகுக் காட்சி தெரிகிறது. இந்த மாலை
மயக்கத்தில் திளைத்திருந்த மக்களை அவர்களது இல்லங்களுக்குச்செல்லும் நினைவினை ஊட்ட வேண்டுமெனக் கருதிப் போலும் கதிரவன் தன் செம்பஞ்சுக் குழம்பின் ஒளியினை மெல்ல மெல்ல மறைத்துக்கொண்டான். வானமங்கை தன் கருநீலப் பட்டாடையைப் போர்த்திக்கொண்டாள். சூரியக்கோளம் பந்து போல மேலை வானில் மறையும் காட்சியைப் பெருந் திரளானோர் அங்கு கண்டுகளித்தனர்.

மேற்குத் திசையை நோக்கிய வண்ணம் கடலையே பார்த்துக்கொண்டிருந்த நான் கிழக்குத் திசையைத் திரும்பிப் பார்த்தேன். என்ன அதிசயம்! என் கண்களையே நம்ப முடியவில்லை. நான் எங்கே நிற்கிறேன்? யாழ்ப்பாணத்தில் நிற்கின்றேனா? என்று ஒரு கணம் திகைத்தேன். காரணம்பனை வடலிகள் பல காட்சி தந்தமையேயாகும். கொழும்பு மாநகருக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் பனை வடலிகள் பல காலிமுகத்திடலின் வீதியோரமாக நடப்பட்டுள்ளன. காலிமுகத்திடலுக்கு வருவோரின் கவனம் இப் பனைவடலிகளின் பாலீர்க்கப்படுகிறது. பூலோக கற்பகதரு அல்லவா! அவற்றைப் புறக்கணிக்க முடியுமா?

பல வர்ணமின்விளக்குகள் காலிமுகத்திடலைச் சொர்க்கபுரியாக மாற்றிக்கொண்டிருந்தன. பட்டம் விடும் சிறுவர்கள் இந்த வர்ண ஒளியில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்தார்கள். வானளாவிப் பறந்த அப்பட்டங்கள் வானில் தெரியும்பலவர்ணத்தாரகைகள் போற் தென்பட்டன. கொக்ககோலா குளிர்பான நிலையங்களும், குளிர்கழி (ஐஸ்கிறீம்) விற்பனை நிலையங்களும் மக்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தன. மாலைப்பொழுது விடைபெற்றுக் கொண்ட போதும் காலிமுகத்திடலை விட்டுப்பிரிய மனமின்றிப் பலர் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தனர்.கடல் நீரும் நீலவானும் கைகோர்க்கும் காட்சியினைக் கண்டு மகிழ்ந்தவண்ணம் யானும் இருப்பிடம் நோக்கிப் பயணமானேன். இயற்கை அன்னை எமக்களிக்கும் இன்பக் காட்சிகளில் கடற்கரைக் காட்சியும் ஒன்றாகும். அதனை எண்ணியெண்ணி என் மனதில் இன்றும் கடலலை போல் உணர்வலைகள் பொங்கி எழுந்தவாறே இருக்கின்றன. உள்ளங்கவரும் காட்சியல்லவா? எப்படி மறக்க முடியும்?

4) விளக்கக் கட்டுரைகள்
ஒரு பொருளை விளக்கமாக எடுத்துக் கூறி வாசிப்போரைத்தெளிவுபடுத்தும் வகையில் அமைவது. (சூழல் மாசடைதலைத் தடுப்போம், விஞ்ஞானத்தின் விந்தைகள், கணனிக் கல்வியின் அவசியம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் போன்ற விடயங்கள்)

உதாரணம்:
அனைவருக்கும் கல்வி

‘அனைவருக்கும் கல்வி’ என்ற கோஷம் இன்று உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. அரசுகளின் இன்றியமையாக்கடமைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது வருமானத்திற் பெரும் பகுதியைக் கல்விக்காகச் செலவிடுகிறது. ஆனால் இதன் பயன்பாடு பூரணத்துவமுள்ளதாக அமைகின்றதா? என்பது சிந்தனைக்குரியதாகவே விளங்குகின்றது.
மனித சமுதாயம் பலவகையான மக்கட் கூட்டத்தைக் கொண்டுள்ளது. படித்தவர், பாமரர், செல்வர்கள், ஏழைகள், நல்லவர்கள், தீயவர்கள் எனப் பல்வேறு பாகுபாடுகள் நிலவுகின்றன. சமுதாயத்தில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டுமா? இவை அவசியந்தானா? என்றால் இல்லையென்றே கூறுவர். எனவே இதுபற்றி நாம் நன்கு சிந்திக்க வேண்டும். மனிதனுக்கும் மற்றைய பிராணிகளுக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறிவு என்பதாகும். பகுத்தறிவே மனிதனை உன்னத நிலைக்கு இன்றுவரை உயர்த்தி வைத்துள்ளது. இதன் மூலமே மனிதன் மொழிகளை உருவாக்கவும் விஞ்ஞான ரீதியில் புதியன பலவற்றை உருவாக்கவும்,புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது.

காலந்தோறும் தாம்கண்டறிந்த உண்மைகளைத் தத்தம் மொழிகளில் பதிந்து வைத்தும் பயன்படுத்தியும் முன்னேற்றம் கண்டுள்ளனர். தாம் அடைந்த முன்னேற்றத்தை நிலைநாட்டவும், தத்தமக்கேற்ற வழிகளில் பயன்படுத்தவும் கல்வியே மனித சமுதாயத்திற்கு உகந்த ஒரேயொரு சாதனமாகத் திகழ்கிறது. கல்வியின் மூலமே ஒரு சமுதாயத்தின் பண்பாடும் விழுமியங்களும் அழிந்தொழியாது பாதுகாக்கப்பட முடியும். இந்நிலையில் மனித சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி எல்லோரும் ஓர் இனம் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், சமத்துவமாகச் சகலரும் வாழ்வதற்குரிய வழியினைக் காட்டவல்லது கல்வி ஒன்றேயாகும். எல்லோரும் சமத்துவமாக, எல்லாம் பெற்று வாழ வேண்டுமாயின் அனைவருக்கும் உகந்த கல்வி அளிக்கப்படுதல் அவசியமாகும்.

நாம் வாழும் சமுதாயத்தை ஒரு உடலாக உருவகிப்போமாயின் அந்த உடலில் உள்ள எந்த உறுப்பையும் நாம் ஏற்றது அல்ல என ஒதுக்கி விடமுடியாது. ஓர் உறுப்புக்கு ஊறு நேர்ந்தால் அது உயிரின் இயக்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதேபோன்று தான் கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் உயிர் மூச்சாயமைந்துள்ளது. சமுதாய உறுப்புக்கள் யாவிலும் கல்வி தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. அதற்குப் பங்கம் விளைந்தால் சமுதாயமே பெரிதும் பாதிப்புறும். கல்வி என்பது நமது கண்போன்றது. கல்விக்கண் இன்றேல் நாம் கண்ணிருந்தும் குருடராகவே கருதப்படுவோம். எனவே அனைவருக்கும் கல்வி அளிப்பதன் மூலமே சமுதாயம் ஒளிபடைத்த சமுதாயமாகத் திகழமுடியும்.

‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனையவர்’

என்பது வள்ளுவர் வாக்கு. மனிதன் விலங்காக வாழக்கூடாது. அவன் மனிதனாக, மனிதப் பண்புள்ளவனாக வாழவேண்டும். அதற்குக் கல்வியே அச்சாணி. ஒரு சமுதாயத்தில் ஒரு பகுதியினர் கல்வியறிவு படைத்த மனிதராகவும் மற்றப் பகுதியினர் கல்வியறிவில்லாத மாக்களாகவும் வாழ நேர்ந்தால் அந்தச் சமுதாயம் சீர்பெற முடியாது. முழுச்சமுதாயத்திற்குமே அது பெரும் இழுக்காகும். இவ்வுண்மையை நன்குணர்ந்தமையாற்றான் ஒவ்வோர் நாட்டரசும் தனது குடிமக்களுக்குக் கல்வியளிப்பதைப் பெரும் கடனாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுவரை கட்டாயக்கல்வி புகட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் அரசு அளிக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தாது சிலர் வறுமை, அறியாமை.

‘அலட்சியம் காரணமாகத் தங்கள் பிள்ளைகளின் கல்வியிற் கவனம் செலுத்தாது விடுகின்றனர். இதனால் வருங்காலப் பிரசைகளான மாணவர்கள் பலர் கல்வி பெறும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். வீட்டு வேலைகளுக்கும் வியாபார நிலையங்களுக்கும், கூலித் தொழில்களுக்கும் செல்லும் மாணவர்கள் கல்வியின் அருமையை அறியாது பின்னாளில் இரங்க வேண்டிய நிலைக்குள்ளாகின்றனர்; பெற்றோர்களின் தவறு குறித்து வருந்துகின்றனர். படிக்கும் காலம் பொற்காலம் என்பர். அக்காலத்தை இழந்து விடும் மாணவர்கள் கல்விக்கண்ணை இழந்தவர்களாகின்றனர். இது பெரும் கொடுமை. இக்கொடுமை ஒழிய வேண்டுமாயின் அனைவருக்கும் கல்விபுகட்டப்பட வேண்டும்.

‘எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசனார். இதற்கமைய எல்லோருக்கும் கல்வி புகட்ட ஏற்றன யாவும் செய்யப்பட வேண்டும்.

‘அனைவருக்கும் கல்வி’ என்றால் குடிமக்கள் அனைவருக்கும் எழுத வாசிக்கத் தெரிந்தாற் போதும் என நாம் கருதிவிடக் கூடாது. ஒருவன் தான் பெற்றுக் கொண்ட கல்வியால் தனக்கும் தான் வாழும் சமுதாயத்திற்கும் பயன்படும் அளவிற்கு அவனது கல்வி அமைதல் வேண்டும். எல்லோரும் பொறியியலாளர்களாகவோ, பேராசிரியர் களாகவோ, மருத்துவர்களாகவோ ஆகி விட வேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு. அவரவர் தம் ஆற்றலுக்கேற்பத் தொழிற்றுறைக் கல்வியையோ, தொழில்நுட்பக் கல்வியையோ, நுண்கலைக்கல்வியையோ பெறும் வாய்ப்பினை நல்கிட வேண்டும். அத்தகைய வாய்ப்பும் வசதியும் கிட்டும் போதுதான் அனைவருக்கும் கல்வி’ என்ற சொற்றொடர் பொருளுடையதாக அமையும்.

இன்று இத்தகைய பொருளுடையதான கல்வியைப் பெறுதற்குப்பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இன, மத, சாதி வேறுபாடுகள் குறுக்கிடுகின்றன. கிராமப்புற மாணவர்க்கும் நகர்ப்புற மாணவர்களுக்குமிடையே கல்வி வசதிகளை அளிப்பதில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. பணம் படைத்தோர் பிள்ளைகள் அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் ஏழை மாணவர்களுக்கு எட்டுவதா யில்லை. இந்நிலை மாற வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் எல்லா வசதிகளும் கிட்ட வேண்டும். அத்தகைய ஒரு சூழ்நிலையிற்றான் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற சொற்றொடர் அர்த்தமுள்ளதாக அமையும் என்பது உறுதி.

5) கற்பனைக் கட்டுரைகள்
இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாகப் பாவனை செய்து இலக்கிய நயம்பட எழுதுவது. (மனித சஞ்சாரமற்ற தீவில் ஒரு நாள், நான்கல்வியமைச்சரானால் இத்தகைய விடயங்கள்)

உதாரணம்:

நான் பிரயாணம் செய்த பாறையொன்றுடன் மோதி உடைந்தபோது

அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரணை நாள். வெண்ணிலவு வானில் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. தென்றல் காற்று மெல்லென வீசி உடலுக்கு இன்பமளித்தது. மாலை ஏழுமணி. கொழும்புத்துறையில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி எங்கள் படகு புறப்பட்டபோது எல்லாம் அமைதியாகவே இருந்தது. எப்படியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நல்லபடியாக நாங்கள் இராமேஸ்வரத்தைச் சென்றடைய
வேண்டும் என்று படகில் இருந்தோர் அனைவரும் இறைவனை வேண்டிக்கொண்டோம்.

சற்று நேரத்தின் பின் யாழ்ப்பாண நகரில் வாண வேடிக்கை போன்று ஷெல் சத்தங்களும் துப்பாக்கி வேட்டொலிகளும் கேட்டன. கண்ணைப்பறிக்கும் மின் ஒளிகள் ‘பளிச்’ ‘பளிச்’ செனத் தெரிந்தன. கடல் அலைகளைக் காற்று வருட, இதயங்களைப் பயம் என்னும் பருந்து கௌவிக் கொள்ளப் படகில் எல்லோரும் சோகத்துடன் அமர்ந்திருந்தோம். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள் என்று எல்லாமாக நூற்றுப் பத்துப் பேர்வரை பயணிகள் இருந்தோம். அனைவரும் தங்கள்
இல்லங்களைவிட்டு, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த இடங்களை விட்டு, உயிரைக் காப்பாற்றினாற் போதும் என்ற ஒரே நோக்குடன் படகேறியவர்கள்.

அவர்கள் தம் பயணத்தின் நோக்கமும் அதுவே. காற்றிலும் கடிய வேகத்தில் இரு இயந்திரங்கள் பூட்டப்பெற்ற எங்கள் படகு விரைந்து கொண்டிருந்தது. கடற் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கடற்படைக்கப்பல்களுக்குத் தெரியாமல் இந்தியக் கடல் எல்லையை எட்டிப் பிடித்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாலுமிகள் படகை
விரைந்து செலுத்தினர். இருமணி நேரத்தின் பின் எங்கள் படகு இந்தியக்கடல் எல்லைக்குள் புகுந்து – விட்டதாக மாலுமிகள் கூறினர். இனிப்பயம் இல்லை. இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் இராமேஸ்வரக்கரையைச் சென்றடைந்து விடுவோம் என்றும் அவர்கள் எங்களுக்குத் தேறுதல் கூறினார்கள். ஆனால் பயணிகள் மனதில் இன்னும் பயம் நீங்கவில்லை என்பதை அவர்களது முகக்குறிகள் காட்டின.
திடீரென வானம் இருண்டது. பலத்த குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் பெரும் இடிமுழக்கம், மின்னல் கண்களைக் கூசச் செய்தது.

எவருமே எதிர்பார்க்கவில்லை. பேரிரைச்சலுடன் புயற்காற்று சுழன்றடிக்கத்
தொடங்கியது. இதுவரை அலைக்கரத்தால் படகை அணைத்துச் சென்ற பேரலைகள் சீறி எழுந்து படகுக்கு மேலாகவும் பாய்ந்தன. பயணிகளைப்பயம் கௌவிக் கொண்டது. என்ன நேருமோ? என்று எல்லோரும் ஏங்கினர். கடல் அலைகளின் சீற்றத்தால் படகு வெறிகாரன் போல அங்கும் இங்குமாகத் தளம்பித் தடுமாறுகிறது. படகோட்டிகளின்
முகங்களிலும் பீதி தென்படுகிறது. போதாக்குறைக்கு மழையும் கொட்டத்
தொடங்கியது. யான் படகின் அணியத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றைப் பிடித்தபடி இருந்தேன். படகு கடலலைகளின் சீற்றத்திற் கேற்ப மேலெழுந்தும் தாழ்ந்தும் திசை தெரியாது போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்தின் பின் ‘படார்…’ என்றொரு சத்தம் கேட்டது. நாங்கள் பயணம் செய்த படகு கற்பாறை ஒன்றுடன் மோதி உடைந்து விட்டது. ஒரே கூக்குரல். ‘ஐயோ’ முருகா! கர்த்தரே! எங்களைக் காப்பாற்று.
ஏதிலிகளாக வந்த எங்களைச் சோதிக்காதே! இறைவா! இறைவா!! என்று கூக்குரலிடுகிறார்கள் பயணிகள். படகின் உடைந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு கடலில் மிதக்கிறேன் நான். மற்றவர்கள் கதி எதுவோ அறியேன். இப்படியே கடலில் என் பலம் கொண்ட மட்டும் மரக்கட்டையை விடாது பிடித்தவண்ணம் கால்களையும் கைகளையும் அடித்தபடி என் உயிரைக் காப்பாற்றிக் கரை சேர
முயற்சிக்கிறேன். இத்தனை துன்பத்துக்கும் மத்தியிலும் எனக்கோர் கைவிடான் என்ற
ஆறுதல். எனது ஊர்க்குளத்தில் சிறுவயதிலேயே எனக்கு நீச்சல் பழக்கிய
தந்தையாரை நினைக்கின்றேன்.

அவர் பழக்கிய பயிற்சி இப்போது என் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது என்பதே அந்த ஆறுதலுக்குக் காரணம், என் குலதெய்வமாகிய முருகன் என்னைக்
நம்பிக்கையில் நீந்திக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது புயல் அடங்கி விட்டது. வானத்தைக் கௌவியிருந்த இருள் சிறிது சிறிதாக விலகிக் கொண்டிருக்கிறது. கடல் அலைகள் வேகம் தணிந்து அமைதி கொள்கின்றன. யான் தொடர்ந்து நீந்திக்
கொண்டே இருக்கிறேன். என்னுடன் படகில் வந்தோர் கதி என்னவோ என்ற கவலையும் மனத்தைச் சஞ்சலப்படுத்துகிறது. எல்லாம் இறைவன் செயல் என்ற நெஞ்சுறுதியுடன் தொடர்ந்து நீந்துகிறேன். பலமணிநேரம் கடந்திருக்கும். கடலலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்த யான் மண்மேடொன்றை வந்தடைந்தேன். நாற்புறமும் கடல் நடுவே சிறு
மேடு. அந்த மேட்டில் கைகள் சலிக்க, கால்கள் நடுங்கக் குப்புறப்படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் கிடந்தேனோ? தெரியவில்லை. காலைக் கதிரவனின் ஒளி என் மேனியில் ‘சுளீரெனச் சுட்டது. விழித்துப் பார்த்தேன். தூரத்தே மீன்பிடிப் படகொன்று வந்து கொண்டிருந்தது. என் பலம் கொண்டமட்டும் சத்தமிட்டு அதனை அழைத்தேன்.
என் நல்ல காலம். மீன்பிடிப்படகு என்னருகே வந்தது.

நடந்த நிகழ்வுகளை அப்படகில் இருந்தோரிடம் கூறினேன். அவர்கள் என்மீது
இரக்கம் கொண்டனர். படகில் ஏறுமாறு கூறினர். இறைவா இதுவும் உன் திருவிளையாடலா? என்று நினைத்த வண்ணம் அப்படகில் ஏறினேன். படகுக்காரர்கள் என்னை இராமேஸ்வரக் கரையருகே இறக்கி விட்டார்கள். யான் சிறிது தூரம் கடலில் நடந்து இராமேஸ்வரக் கரையை அடைந்தேன். இந்திய காவற்படையினர் என்னை விசாரித்தனர். யான் நடந்தவற்றைக்கூறினேன். அவர்கள் என்னை மண்டபம் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். யான் உயிர் பிழைத்து விட்டேன். ஆனால் என்னுடன் படகில் பயணம் செய்தோர் பலரும் கடலில் மூழ்கி இறந்து விட்டனர் என்பதை
எண்ணும்போது என்னுள்ளம் வேதனைத் தீயில் வேகின்றது.

6) விமர்சனக் கட்டுரைகள்
புத்தகம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றைச் சீர்தூக்கித் திறனாய்வு செய்யும் (குறை, நிறைகளை விமர்சிக்கும்) வகையில் எழுதப்படுவன. (அண்மையில் பார்த்த திரைப்படம், இன்றைய புதுக்கவிதைகள், நான் படித்து மகிழ்ந்த நூல் போன்றன)

உதாரணம்:

நான் கண்ட பொருட்காட்சி

நான் மகிழூர் மத்திய கல்லூரியில் கல்வி கற்கிறேன். எமது கல்லூரியில் முதலாம் வகுப்பு முதல் பதின்மூன்றாம் வகுப்புவரை  வகுப்புக்கள் உள்ளன. விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவுகளில் 180 மாணவர்கள் வரை உயர் கல்வி பயில்கின்றனர். இவர்களைவிடப் பாலர் வகுப்புத் தொடக்கம் பதினொராம் வகுப்புவரை 1200 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்களைக் கொண்டு விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், மொழி, சித்திரம், விவசாயம், மனைப்பொருளியல் தொடர்பான
கல்விக் கண்காட்சி ஒன்றை நடத்துவதென எமது அதிபரும் ஆசிரியர்களும்
தீர்மானித்தனர். இது குறித்துச் சகல மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
பொருட்காட்சி நடைபெறும் நாட்களை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

சென்ற தவணை விடுமுறைக்கு முன் உள்ள மூன்று நாட்களும் எமது கல்லூரியில் இக்கல்விக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியிலுள்ள நான்கு மண்டபங்கள் இதற்கென ஒதுக்கப்பட்டிருந்தன. நாற்பது அறைகளில் இக்கண்காட்சி பாட ஒழுங்கின் அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கல்லூரி வாயிலில் கோபுர அமைப்பில் கண்காட்சியை ஒட்டி அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய சிகரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி நடைபெறும் மண்டபங்கள் நான்கும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஒவ்வோர் மண்டப வாயிலிலும் அம்மண்டபத்திலுள்ள
கண்காட்சி அறைகள் தொடர்பான அட்டவணைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கண்காட்சி அறைகளுக்குச் செல்லும் வழியையும் திரும்பும் வழியையும் காட்டும் அட்டைகள் பெரிதாக வைக்கப்பட்டிருந்தன.

முதலாவது மண்டபத்திலுள்ள பத்து அறைகளிலும் ஆரம்ப வகுப்பு (1-5 வரை) மாணவர்களின் ஆக்கப் பொருட்களும், கற்பித்தற் சாதனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் சிறுவர்களைக் கொண்டு சிக்கனமான முறையில் தயாரித்த பொருட்களே அங்கு அதிகம் காணப்பட்டன. பயன்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களான கடதாசிகள், சோடாமூடிகள், சிகரட் பெட்டிகள், தென்னங்குரும்பைகள், ஈர்க்குகள், சிப்பிகள், சோழிகள், விதைகள் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பொருட்கள் சிறுவர்களின்
ஆக்கத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன. ஒரு அறையில் சிறுவர்கள் வரைந்த சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்கால நிகழ்வுகளை, சிறுவர்கள் தாம் கண்ணாற் கண்டவற்றைத் தம் ஆற்றலுக்கேற்பச் சித்திரங்களாகத் தீட்டியிருந்தனர்.

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தென்னங்குரும்பைகள், ஈர்க்குகள், வண்ணக் கடதாசிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்கள் பலவற்றை ஆக்கியிருந்தனர். அவை ‘தேர் வருகுது தேர் வருகுது’ என்ற தலைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சின்னஞ் சிறுவர்களின் பிஞ்சுக் கரங்கள் உருவாக்கிய இத்தேர்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் தாம் சுயமாக ஆக்கிய ‘எனது புத்தகம்’ காட்சியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது.
தாம் விரும்பும் பாடல்கள், கதைகள், விடுகதைகள், சித்திரங்கள் என்பனவற்றைக் கொண்டதாக இப்புத்தகங்கள் ஆக்கப்பட்டிருந்தன.

இவை மாணவர்க்கும், பார்வையாளர்களுக்கும் மனநிறைவை அளித்தன.
இரண்டாவது மண்டபத்தில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களின் காட்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை பாட ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஏழாம் வகுப்பு மாணவர்கள் சமூகக் கல்விப் பாடம் தொடர்பாக செய்து இலங்கையின் வடிவமைப்பைக் களிமண்ணாற்
நிறந்தீட்டியிருந்தனர். மகாவலிப்பிரதேசம், கலாசார முக்கோணப்பகுதிகள்,
நீர்வீழ்ச்சிகள், மலைகள் போன்றவையும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன.
பார்வையாளர்கள் இவ்வடிவமைப்பைப் பாராட்டினர். சமூகக் கல்வி, வரலாறு தொடர்பான அட்டவணைகள், தேசப்படங்கள் என்பனவும் இம்மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இம்மண்டபத்தில் விவசாயம், மனையியல், கணிதம், விஞ்ஞான சம்பந்தமான காட்சிப் பொருட்களும் இடம்பெற்றிருந்தன.

மூன்றாவது மண்டபத்தில் பத்தாம், பதினொராம் வகுப்பு மாணவர்களதுஆக்கங்களும் கற்பித்தற் சாதனங்களும் இடம் பெற்றிருந்தன. இம்மண்டபத்தில் விஞ்ஞானம், மனையியல், விவசாயம் தொடர்பான உபகரணங்களை மட்டுமன்றி அவற்றிற்கான செயன் முறை விளக்கங்களையும் மாணவர்களே வழங்கியமை பாராட்டத்தக்கதாக
இருந்தது. பார்வையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் மாணவர்கள் செய்முறை மூலம் விளக்கமளித்தனர். மனைப் பொருளியல் கற்கும் மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான அழகுப்பொருட்கள், தையற் பொருட்கள், சிற்றுண்டிவகைகள் என்பனவும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. முதலுதவி வழங்கும் அறை, நோயாளர் பராமரிப்பு அறை போன்றவையும் இங்கு இடம் பெற்றிருந்தன.

இவை செயல் மூலம் கற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன. செயல்மூலம் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பதினொராம் வகுப்பிற் கற்கும் நான்
பலநாட் படித்து அறிய வேண்டிய விடய அறிவையும் அனுபவங்களையும்
இக்கண்காட்சியிலிருந்து இந்த மூன்று நாட்களிலேயே பெறக்கூடியதாய்
இருந்தது என்றால் அது மிகையல்ல. நான்காவது மண்டபத்தில் பன்னிரண்டாம், பதின்மூன்றாம் வகுப்பு விஞ்ஞான, கணித, வர்த்தக, கலைப்பிரிவு மாணவர்களின் ஆக்கங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தன. இவற்றைப் பார்வையிட்ட அயற்
பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டமை
இவற்றின் தரத்திற்குச் சான்று பகர்வனவாயிருந்தது.

இவற்றைப் பார்வையிட்ட உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களே பெரிதும் பாராட்டியமை எமது கல்லூரிக்குப் பெருமை தருவதாயிருந்தது. வர்த்தக பாட. மாணவர்கள் தயாரித்திருந்த அட்டவணைகள், வர்த்தகம் கற்கும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்திருந்தன. கண்காட்சியைப் பார்வையிட்ட அயற் மாணவர்கள் அவற்றைப் பார்த்துக் குறிப்பெடுத்துக்
கொண்டமை மூலம் இதனை உணரமுடிந்தது.

பாடசாலை கலை வகுப்பு மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த இலக்கிய வரலாறு
தொடர்பான குறிப்புக்கள், அட்டவணைகள், அறிஞர்களின் படங்கள் என்பனவும் கண்காட்சிக்கு மெருகூட்டுவனவாய் அமைந்திருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் கல்லூரி உயர்தர வகுப்பு ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தப் புனரமைப்புத் தொடர்பான அட்டவணைகளும் மாதிரி வடிவங்களும் பெற்றோர்களும்
ஆசிரியர்களும் கல்விப் புனரமைப்புத் தொடர்பான விடயங்களை இலகுவாக விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தது. சுருங்கக்கூறின் இக்கண்காட்சியானது மாணவர்களின் ஆக்கத் திறனையும் அறிவுத்திறனையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. ‘இன்றைய சூழ்நிலையில் இத்தகைய கண்காட்சி ஒன்றினை அறிவும்
திறனும் அழகும் கவர்ச்சியும் ஒருங்கமைய, ஏனைய பாடசாலைகளுக்கு
ஓர் எடுத்துக் காட்டாக ஒழுங்கு செய்த உங்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இதுமகத்தானதோர் சாதனையாகும். இத்தகைய கண்காட்சிகள் எமது வலயத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளிலும் நடைபெற வேண்டுமென விரும்புகிறேன்’ என்று இக்கண்காட்சியின் போது பிரதம விருந்தினராகக்கலந்து கொண்ட வலயக் கல்விப்பணிப்பாளர் கூறியமை முற்றிலும் பொருத்தமானதே.இக்கண்காட்சி எமது கல்லூரியின் மகத்தான சாதனையென்றே கருதுகிறேன். கல்லூரி மாணவி என்ற வகையில் எனது கல்லூரி குறித்து உண்மையிலேயே யான் பெருமை கொள்கிறேன். மேன்மேலும் எனது கல்லூரி சாதனைகள் நிலைநாட்ட உழைக்க வேண்டுமென உளமார விரும்புகிறேன். மாணவர் தம் கல்விக் கண்திறக்கும் கண்காட்சிகளைக்
காண்பதும் இன்பந்தானே!

7) நகைச்சுவைக் கட்டுரைகள்
பல்வேறு வாழ்க்கை முறைகளைப் பின்னணியாகக் கொண்டு நகைச்சுவையோடு எழுதப்படுவன. (ஞாபகமறதியுள்ள ஒருவரின் வேடிக்கைச் செயல்கள், நான் வழியிற் கண்ட அதிசய மனிதர் போன்றவை)

கட்டுரையின் முக்கிய பிரிவுகள் :

 1. முன்னுரை (ஆரம்பம்)
 2. பொருளுரை
 3. முடிவுரை.

முன்னுரையும், முடிவுரையும் ஒவ்வொரு பந்திக்குள் அமைய வேண்டும். பொருளுரைப்பகுதி கருத்துக்களைப் பலவழிகளில் விளக்கிக்கூறுவதால் பல பந்திகளைக் கொண்டு விளங்கும்.

முன்னுரை:

கட்டுரைத் தலைப்பினை விளக்கும் வகையிலும் கட்டுரையின் கருத்தினை வகுத்துக் கூறும் வகையிலும் முன்னுரை அமைய வேண்டும். முன்னுரை உடலுக்குத் தலை போலச் சிறப்பாக அமைந்தாற்றான் கட்டுரையில் கூறப்படும் கருத்துக்களை அறிய ஆவல் ஏற்படும். கட்டுரை முழுவதையும்படிக்கத் தூண்டும் முறையில் முன்னுரை அமைய வேண்டும்.

பொருளுரை:

கட்டுரைத் தலைப்பிற்கேற்பப் பொருள்களையும் அதில் அடங்கியுள்ள கருத்துக்களையும் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி பொருளுரை எனப்படும். பொருளுரைப் பகுதியில் பல பத்திகள் அமையும். ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மையக்கருத்தும் அக்கருத்தை விளக்குகின்ற செய்திகளும் அமையும். ஆகையால், பொருளுரைப் பகுதியைப் பல பத்திகளாகப் பிரித்து, கருத்துக்களுக்கேற்பத் துணைத் தலைப்புக்களையும் கொடுத்து எழுதுதல் வேண்டும்.

முடிவுரை:

கட்டுரையின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதாகவும் கட்டுரையின் முதன்மையான பயனை எடுத்துக் கூறுவதாகவும் இறுதிப்பகுதியில் அமைவது முடிவுரையாகும். முடிவுரையும் சிறப்பாக அமைதல் வேண்டும்.

கட்டுரை எழுதுவோர் கருத்தில் கொள்ள வேண்டியன:

 1. கட்டுரைக்கான தகவல்களைப் பல நூல்களைப் படிப்பதன் மூலமும் கல்வி அறிவாளர்களிடம் கேட்பதன் மூலமும் திரட்டிக் கொள்ளுதல் வேண்டும்.
 2. போதுமான தகவல்களைத் திரட்டிய பின்னர் அவற்றை நன்கு அவதானித்துக் கட்டுரைக்குத் தேவையானவை எவை என்பதைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்த பின் எந்த ஒழுங்கில் அவற்றைக் கட்டுரையில் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ‘வேண்டும். அவ்விதம் தீர்மானித்தபின் தகவல்களை ஒழுங்குமுறையில், கட்டுரையின் தன்மைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவும்.
 3. முன்னுரையை நன்றாக அமைத்துக் கொண்டு, பொருளுரையில் கூறப்போகும் கருத்துக்களை எதை முதலில் தொடங்குவது எதை இறுதியில் முடிப்பது என வரிசைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
 4. பொருளுரைப் பகுதியில் கருத்துக்களைச் சிறுசிறு பத்திகளாகப் பிரித்தும் வேண்டுமெனில் துணைத்தலைப்புக்கள் அமைத்தும் எழுதுதல் வேண்டும்.
 5. ஒவ்வொரு பத்தியிலும் முதல் வரியில் சிறிது இடம் விட்டு பத்தியின் தொடக்கம் அமையுமாறு எழுதுதல் வேண்டும்.
 6. வரியின் தொடக்கத்தில் ஒற்றெழுத்தோ, தனி எழுத்தோ வருதல் கூடா. கை எழுத்து அழகாக இருத்தல் வேண்டும்.
 7. கட்டுரையின் பொருளுக்கேற்ப மேற்கோள்கள், பழமொழிகள், உவமைத் தொடர்கள், சான்றோரின் பொன்மொழிகள் ஆகியவற்றைக் கட்டுரையில் அமைத்துக் கட்டுரையைச் அழகாகவும் மாற்றுதல் வேண்டும்.
 8. கட்டுரையினை எழுதும் போது சொற்களை அதிகமாகப் பெருக்காமல் சுருக்கமாகக் கூறி விளக்குதல் வேண்டும்.
 9. விடயங்களைத் தெளிவாக வாசிப்போர் மனதில் பதியும் வகையில் எழுதுதல் வேண்டும்.
 10. வாசிப்பவருக்குப் பயன் தரும் வகையிலும் மேலும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் கட்டுரை அமைதல் வேண்டும்.
 11. கட்டுரையில் எழுத்துப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதுதல் வேண்டும்.
 12. மொழிநடை எளிதாகவும் எல்லோர்க்கும் விளங்கும் வகையிலும் எழுதுதல் வேண்டும்.
 13. ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் போதுமான இடம் விட்டு எழுதுதல் வேண்டும்.
 14. கட்டுரை எழுதி முடித்தபின் பிழைகள் இல்லாமல் இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும். இருப்பின் உடன் நீக்குதல் வேண்டும்.

மேற்கூறிய விதிகளை மனதிற் கொண்டு கட்டுரை எழுதப்படின் அது மிகச் சிறப்பானதாக அமையும்.

தவிர்க்கவேண்டியவை:

கட்டுரை எழுதும்போது மாணவர் தவிர்க்க வேண்டியவை வருமாறு:

  1. மிகைபடக் கூறுதல் : ஒரு விளக்கத்தைக் கூறச் சுற்றி வளைத்து எழுதுதல்.
  2. கூறியதுகூறல் : முன் சொன்ன விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்
  3. முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல்.
  4. பொருள் தெளிவில்லாமல் எழுதுதல்.
  5. பயனற்ற சொற்களைப் பயன்படுத்துதல்.
Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »